த்ருவுக்கு கிடைக்கும் பாராட்டிற்கு பின்னால் பெரும் வலி புதைந்துள்ளது: இயக்குநர் குமுறல்

த்ருவ் நன்றாக நடித்திருக்கிறார் என்கிற பாராட்டிற்குப் பின்னால் ஒரு பேருண்மையும் பெரும் வலியும் புதைந்து கிடப்பதாக இயக்குநர் தாமிரா தெரிவித்துள்ளார்.


ஆதித்ய வர்மா படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை பார்த்து மகிழ்ச்சியில் இருக்கும் த்ருவ் மற்றும் விக்ரம் ஆகியோர் இயக்குநர் கிரிசாயாவை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்தவர்கள் பாலாவை மறந்துவிட்டீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து இயக்குநர் தாமிரா தன் கருத்தை ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,


ஆதித்ய வர்மா திரைப்படத்தில் துருவ் விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு இது முதல் படம் போல இல்லை. சியான் விக்ரமின் மகன் என்பதை நிரூபித்து விட்டார். தமிழ் திரைக்கு ஒரு நல்ல நாயகன் கிடைத்துவிட்டார். இது தான் ஆதித்ய வர்மா திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிய எல்லோரது கருத்தும். வெகு சிலர், ஆம் இது இவருக்கு இரண்டாவது படம் தானே! என கிண்டலாக, குறிப்பிட்டுச் சொல்லி இருந்தார்கள்.



துருவ் நன்றாக நடித்திருக்கிறார் என்கிற பாராட்டிற்குப் பின்னால் ஒரு பேருண்மையும் பெரும் வலியும் புதைந்து கிடப்பதாகத் தான் நான் உணர்கிறேன். அது குறித்து யாரும் பேசவில்லை என்கிற ஆதங்கமே இந்த பதிவின் காரணி. ஒரு நடிகனாக 'என் காதல் கண்மணி' திரைப்படத்தில் அறிமுகமாகி, இயக்குநர் ஸ்ரீதரால் 'தந்து விட்டேன் என்னை' திரைப்படத்தில் காதல் நாயகனாக அறியப்பட்ட விக்ரம் பத்தாண்டுகள் போராட்டத்திற்கு பிறகு சேதுவில் தான் அடையாளம் பெற்றார்.